தமிழகத்தில் 11 நாட்கள் அரையாண்டு விடுமுறை, சிறப்பு வகுப்புகளுக்குத் தடை... தேர்வு அட்டவணை வெளியானது!
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, 2026–2027-ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை மற்றும் விடுமுறை விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்கள் இணைந்து வெளியிட்டுள்ள இந்தச் சுற்றறிக்கையில், டிசம்பர் 24 முதல் ஜனவரி 3 வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 24.12.2026 முதல் 03.01.2027 வரை அனைத்து மாணவர்களுக்கும் மொத்தம் 11 நாட்கள் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. அரையாண்டு விடுமுறை முடிந்து 04.01.2027 (திங்கட்கிழமை) அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்விதச் சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது எனப் பள்ளிகளுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது
|
|
|
|
|
|
|
|
விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் ஜனவரி 4-ஆம் தேதியன்றே, 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 3-ஆம் பருவப் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். மேலும், அரையாண்டுத் தேர்வில் மாணவர்கள் எழுதிய திருத்தப்பட்ட விடைத்தாள்களை வழங்கி, உரிய பதிவேடுகளில் மதிப்பெண்களைப் பதிவு செய்ய வேண்டும் என அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் எனத் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டு, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.