“Instagram பெண்களுக்கான செயலி” - எலான் மஸ்க் கருத்தால் மீண்டும் வெடித்த சர்ச்சை!

 

இன்ஸ்டாகிராம் பெண்களுக்கான செயலி என்று எலான் மஸ்க் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.எக்ஸ் தளத்தில் Geiger Capital என்ற கணக்கு, “இன்ஸ்டாகிராம் செயலியை அதிகாரப்பூர்வமாக நீக்கிவிட்டேன். இது இயல்பாகவே பெண்களுக்கான செயலி; எந்த பயனும் இல்லை” என்று பதிவிட்டிருந்தது.

இந்தப் பதிவுக்கு பதிலளித்த எலான் மஸ்க், “Instagram is for girls” என்று குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 1-ம் தேதி அவர் வெளியிட்ட இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராம் குறித்து எலான் மஸ்க் இதுபோன்ற கருத்தை தெரிவிப்பது இது முதல் முறையல்ல. கடந்த மே மாதத்திலும் எக்ஸ் தளத்தில் இதேபோன்று “Instagram is for girls” என்று அவர் பதிவிட்டிருந்தார். அப்போது இன்ஸ்டாகிராம் கணக்கு விவரங்களை தன்னிடம் பகிரும் சில ஆண்கள் குறித்தும் அவர் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்தார்.

தற்போதைய பதிவை தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன. சிலர் எலான் மஸ்க்கின் கருத்தை ஆதரித்த நிலையில், மற்றவர்கள் இன்ஸ்டாகிராம் அனைத்து பாலினத்தினருக்கும் பயன்படுத்தக்கூடிய தளம் என்றும், அதை குறிப்பிட்ட பாலினத்துடன் மட்டும் தொடர்புபடுத்துவது சரியல்ல என்றும் எதிர்வினையாற்றியுள்ளனர்.

இதனிடையே, இன்ஸ்டாகிராம் பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் தளம் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை. சமீபத்திய பயனர் தரவுகளும் அதன் பயனர்கள் ஆண், பெண் என இருபாலரிடையேயும் பரவலாக இருப்பதை காட்டுகின்றன.

எலான் மஸ்க், மெட்டா நிறுவனத்தின் சமூக வலைதளங்களை தொடர்ந்து விமர்சித்து வருவதுடன், தனது எக்ஸ் தளத்தை மாற்று சமூக வலைதளமாக முன்னிறுத்தி வருகிறார். அந்த வரிசையில் இன்ஸ்டாகிராம் குறித்த அவரது தற்போதைய கருத்தும் கவனத்தை ஈர்த்துள்ளது.