நெகிழ்ச்சி... ஒரே நாளில் திருமணம், ஒரே நாளில் பிரசவம்... கேரள இரட்டை சகோதரிகளுக்கு நடந்த அரிய நிகழ்வு!
கேரளாவில் இரட்டைச் சகோதரிகள் ஒரே நாளில் திருமணம் செய்துகொண்டதுடன், தற்போது ஒரே நாளில் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ள அரிய நிகழ்வு அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோட்டயம் மாவட்டம் திருவஞ்சூர் பகுதியைச் சேர்ந்த அனில்குமார்-சூர்யா தம்பதியின் இரட்டைப் பெண் குழந்தைகள் ஆதிரா மற்றும் ஆர்யா (25). இருவரும் செவிலியர் படிப்பு முடித்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரே துறையில் பணியாற்றினர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி இந்த இரட்டைச் சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கோலாகலமாக நடத்தி வைக்கப்பட்டது. ஆதிராவை அகிலேஷ்குமாரும், ஆர்யாவை சிரன் மோகனனும் கரம் பிடித்தனர்.
திருமணத்திற்குப் பிறகு கணவருடன் வெளிநாடு சென்ற ஆதிரா தோஹாவிலும், ஆர்யா ஓமனில் உள்ள மருத்துவமனையிலும் செவிலியர்களாகப் பணிபுரிந்தனர். இதற்கிடையே இருவரும் ஒரே காலகட்டத்தில் கர்ப்பம் தரித்தனர். கடந்த மாதம் 9-ஆம் தேதி இருவரும் சில மணி நேர இடைவெளியில் அழகான பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.
குழந்தைகளின் பெயர் சூட்டு விழாவிற்காகச் சொந்த ஊரான கோட்டயம் திருவஞ்சூருக்குத் திரும்பிய தம்பதியினர், ஆர்யா-சிரன் மோகனன் தம்பதி மகளுக்கு 'நிதாரா' என்றும், ஆதிரா-அகிலேஷ்குமார் தம்பதி மகளுக்கு 'நிவேத்யா' என்றும் அன்போடு பெயரிட்டுள்ளனர். இந்த விசேஷமான நிகழ்வு அப்பகுதி மக்களிடையே மிகுந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளது.