தமிழகம் முழுவதும் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் திடீர் மூடல்: ஊழியர்கள் போராட்டம்!
மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலித்த புகாரின் பேரில் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மது பாட்டில்களுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், நேற்று 67 பேரும், இன்று 150 பேரும் என மொத்தம் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் திடீர் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தங்களது மீதான நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் ஊழியர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் கடைகளைத் திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டாஸ்மாக் கடைகள் திடீரென அடைக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதற்கிடையே, சஸ்பெண்ட் நடவடிக்கையைத் திரும்பப் பெறும் வரை இந்தத் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என ஊழியர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.