என்கவுண்ட்டரில்  பிரபல ரவுடி சுட்டுப்பிடிப்பு...  சப்-இன்ஸ்பெக்டரும் படுகாயம்!

 

தூத்துக்குடி மினி சகாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மரிய ஆக்னல். 36 வயதாகும் இவர் மீது கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் திருச்செந்தூர் அருகேயுள்ள சோனகன்விளை பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை பிடிக்க முயன்றனர்.

அப்போது ரவுடி ஆக்னல் தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் போலீசாரை நோக்கி திடீரென சுட்டுள்ளார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு காயமடைந்த நிலையில், சுதாரித்துக் கொண்ட அவர் தற்காப்புக்காகத் தனது துப்பாக்கியால் ரவுடியைத் திருப்பிச் சுட்டார். இதில் காலில் குண்டு பாய்ந்த ரவுடி ஆக்னல் நிலைகுலைந்து கீழே விழுந்ததை அடுத்து போலீசார் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ரவுடி ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த மோதல் சம்பவம் குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.