தொழிலதிபர் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய ரவுடி கும்பல் மீது போலீசார் என்கவுண்டர்... 4 பேர் சுட்டுக்கொலை!
அரியானா மாநிலம் குருக்ராம் சுஷாந்த் லோக் பகுதியில், எஸ்டிஜி பல்கலைக்கழக நிறுவனரின் மகனான பிரபல தொழிலதிபர் ஒருவரைக் குறிவைத்து, வெளிநாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தீபக் நந்தல் ரவுடி கும்பல் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளது. இந்த நிலையில், பயங்கர ஆயுதங்களுடன் சிலர் காரில் சுற்றித் திரிவதாகப் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் அந்தப் பகுதியில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
போலீசார் தேடிக்கொண்டிருந்த போதே அந்த ரவுடி கும்பல் தொழிலதிபரின் வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. சத்தம் கேட்டுச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அக்கும்பலைச் சரணடையுமாறு எச்சரித்த போது, அவர்கள் போலீசார் மீதும் சரமாரியாகச் சுட்டுள்ளனர். இதனால் போலீசார் தங்களின் தற்காப்பிற்காகத் திருப்பி நடத்திய அதிரடி என்கவுண்டரில் அக்கும்பலைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து சதர் உதவி கமிஷனர் தரம்பிர் சிங் கூறுகையில், வெளிநாட்டில் இருக்கும் கும்பலிடம் இருந்து மிரட்டல் மற்றும் பணம் பறிப்பு போன் அழைப்புகளைப் பெற்று வந்த முக்கியத் தொழிலதிபரின் வீட்டிற்குள் இந்தச் சமூக விரோதிகள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர் எனத் தெரிவித்தார். போலீசார் உரிய நேரத்தில் எடுத்த இந்தத் தற்காப்பு நடவடிக்கையால் தொழிலதிபர் குடும்பத்தினர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தொழிலதிபர் வீட்டில் நடந்த இந்த என்கவுண்டர் சம்பவம் அரியானா மாநிலத்தில் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.