வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. சிஎஸ்கே அணியில் இணைகிறார் ஹர்திக் பாண்டியா!
மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டிரேட் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வந்த செய்திகளுக்குச் சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒன்பதாவது இடத்தைப் பிடித்துப் பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா அணியில் இருந்து வெளியேற விரும்புவதாகவும், அவரை வாங்க சிஎஸ்கே உள்ளிட்ட 7 பிராஞ்சைசிகள் ஆர்வம் காட்டி வருவதாகவும் செய்திகள் உலா வந்தன. இதுகுறித்துக் காசி விஸ்வநாதன் விளக்கமளித்துள்ளார்.
"ஹர்திக் பாண்டியாவை அணியில் சேர்ப்பது குறித்துச் சிஎஸ்கே நிர்வாகத் தரப்பில் இதுவரை எந்தவொரு பேச்சுவார்த்தையோ அல்லது ஆலோசனையோ நடத்தப்படவில்லை. பரவி வரும் செய்திகள் யாவும் அடிப்படையற்றவை" என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
சிஎஸ்கேவின் துணை நிறுவனமான 'டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்' அணி அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதனால் சிஎஸ்கே நிர்வாகத்தின் முக்கியப் புள்ளிகள் அனைவரும் அமெரிக்காவில் உள்ளனர். இந்த எம்.எல்.சி தொடர் முழுமையாக நிறைவடைந்த பிறகே, கடந்த ஐபிஎல் சீசன் குறித்த முழுமையான மதிப்பாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், ஹர்திக் பாண்டியாவின் டிரேட் வதந்திகள் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் செய்தித் தொடர்பாளரும் தங்களது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். அணி நிர்வாகம் தான் சீசன் குறித்த ஆய்வுகளைத் தொடங்கியுள்ளதாகவும், வீரர்களின் டிரேட் குறித்து தற்போதைக்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையிலும் தாங்கள் ஈடுபடவில்லை என்றும், மதிப்பாய்வு முடிந்த பின்னரே இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்றும் மும்பை தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளும் ஹர்திக் பாண்டியாவை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவதாகக் கிரிக்கெட் வட்டாரத்தில் செய்திகள் கசிந்து வரும் வேளையில், சிஎஸ்கே சிஇஓ-வின் இந்த நேரடி விளக்கம் சென்னை ரசிகர்களின் நீண்ட நாள் விவாதங்களுக்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.