முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி.. பொதுப்பணித்துறை ஊழல்கள் குறித்துப் பொதுமக்கள் நேரடியாகப் புகாரளிக்கலாம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

 

தமிழகப் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் தூய்மையான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையிலான முக்கிய அறிவிப்பு ஒன்றை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ளார்.

கடந்த கால ஆட்சிக் காலங்களில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைகளில் முறையற்ற ஒப்பந்தங்கள் மற்றும் லஞ்சப் புகார்கள் பெருமளவில் நிலவியதாகக் குற்றம் சாட்டியுள்ள அமைச்சர், அது குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாகப் புகாரளிக்க முன்வரலாம் எனத் தெரிவித்துள்ளார்.

துறை சார்ந்த ஆய்வுக் கூட்டங்களுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முந்தைய நிர்வாகங்களின் போது நடைபெற்ற குளறுபடிகளைப் பின்வருமாறு விவரித்தார். கடந்த ஆட்சிக் காலங்களில் பதவிகளில் இருந்தவர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் பல்வேறு அரசு ஒப்பந்தங்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளனர்.

துறையின் நிதி ஆதாரங்களைச் சுரண்டும் வகையில் லஞ்சம் மற்றும் பல்வேறு முறைகேடுகள் பெருமளவில் அரங்கேறியுள்ளன. இது போன்ற தவறுகளால் பாதிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் அல்லது பொதுமக்கள் தங்களது புகார்களைப் பதிவு செய்யப் புதிய வழிமுறைகளை அமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சரை நேரடியாகச் சந்தித்தோ அல்லது லஞ்ச ஒழிப்புத் துறையிடமோ தங்களது புகார்களை ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். நேரில் வர இயலாதவர்கள் தங்களின் புகார்களைத் துறையின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம்.

துணிச்சலோடு ஊழலுக்கு எதிராகப் புகார் அளிக்கும் நபர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படுவதோடு, அவர்களுக்குத் தேவையான முழுமையான சட்டப் பாதுகாப்பையும் இந்த அரசு வழங்கும்.