போலீஸ் துணை கமிஷனர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை... கொல்கத்தாவில் தொழிலதிபர் கைது!

 

மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறை, கொல்கத்தாவில் நேற்று நடத்திய  சோதனையில் ஒரு தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற சோதனையில் சுமார் ரூ. 2 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வழக்கின் தொடர்ச்சியாகவே நேற்றைய அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொல்கத்தா காவல்துறையின் துணை கமிஷனரான ஷாந்தனு சின்ஹா பிஸ்வாஸின் பாலிகஞ்ச் இல்லம் உட்பட இரண்டு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 'சன் என்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரான ஜாய் காம்தார், நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு துணை கமிஷனரான பிஸ்வஜித் போத்தார், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகாமல் தற்போது தலைமறைவாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜாய் காம்தாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தங்களின் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளே பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ளது கொல்கத்தா காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.