அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்... தந்தை கண்முன்னே லாரி மோதி இளம்பெண் பலி!

 

சென்னை அருகே திருமணக் கனவுகளுடன் இருந்த இளம்பெண் ஒருவர், தனது தந்தையின் கண்முன்னேயே லாரி மோதி விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் திருநிறைச்செல்வி (24). மகேந்திரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மகள் திருநிறைச்செல்வியுடன் ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

மருத்துவப் பரிசோதனை முடிந்து திருவொற்றியூர் - எண்ணூர் விரைவுச் சாலையில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, எல்லையம்மன் கோவில் அருகே பின்புறமாக அதிவேகத்தில் வந்த சரக்கு லாரி ஒன்று இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. விபத்தின் தாக்கத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த திருநிறைச்செல்வியின் தலையில் லாரியின் சக்கரம் ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

லேசான காயங்களுடன் உயிர் தப்பிய தந்தை மகேந்திரன், தன் கண்முன்னேயே மகள் தல நசுங்கி இறந்து கிடப்பதைக் கண்டு கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்தது. உயிரிழந்த திருநிறைச்செல்விக்கு அடுத்த வாரம் திருமண நிச்சயதார்த்தமும், அதைத் தொடர்ந்து 3 மாதங்களில் திருமணமும் நடத்தப் பெற்றோரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

தகவலறிந்து வந்த திருவொற்றியூர் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார், திருநிறைச்செல்வியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

திருமணக் கனவுகளோடு இருந்த இளம்பெண் தந்தையின் கண்முன்னே விபத்தில் பலியான சம்பவம் திருவொற்றியூர் மற்றும் எர்ணாவூர் பகுதியில் மிகுந்த சோக அலையை உருவாக்கியுள்ளது.