என்ஜினியர் கணவரின் வன்கொடுமைக்கு இளம்பெண் உயிரிழப்பு!

 

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டம் பஜாஜ்நகர் பகுதியில் பட்டதாரி பெண்ணான கோமல் யோகேஷ் மோரே வசித்து வந்தார். 30 வயதான இவருக்குக் கணினி பொறியாளரான யோகேஷ் மோரே என்பவருடன் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான தொடக்கக் காலத்தில் சுமுகமாகச் சென்ற வாழ்க்கையில் நாளடைவில் கடும் பிளவுகளும் மனக்கசப்புகளும் ஏற்படத் தொடங்கின. கணவர் யோகேஷ், மாமனார் ரேவ்நாத், மாமியார் காந்தா மற்றும் மைத்துனர் சச்சின் ஆகியோர் கோமலுக்குத் தொடர்ந்து மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்திரவதைகளை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று அதிகாலை நேரத்தில் கோமலின் மாமனார், அவரது தந்தையைத் தொடர்புகொண்டு கோமல் சுயநினைவின்றி இருப்பதாகக் கூறியுள்ளார். இந்தத் தகவலைக் கேட்டுப் பதறியடித்த கோமலின் சகோதரர் மருத்துவர் கிருஷ்ணா பவார் மற்றும் தந்தை உடனடியாக வீட்டிற்கு விரைந்து சென்றனர். வீட்டின் பின்புற கதவு வழியாக உள்ளே சென்று பார்த்தபோது கோமல் தனது அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரது உடலில் காயங்கள் இருந்ததால் இது தற்கொலை அல்ல கொலை என்றும், கணவர் வீட்டார் அவரைத் தற்கொலைக்குத் தூண்டியுள்ளனர் என்றும் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

தாய் உயிரிழந்ததால் அவரது 8 வயது மற்றும் இரண்டரை வயதான இரு சிறு குழந்தைகள் தாயைப் பிரிந்து தவித்து அழுது புலம்பினர். எதுவும் அறியாத பிஞ்சுக் குழந்தைகள் அழுது புலம்பிய இந்தக் காட்சி அங்கு திரண்டிருந்த உறவினர்களின் கண்களைக் குளமாக்கியது. இச்சம்பவம் தொடர்பாகக் கோமலின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் வால்யூஜ் காவல் துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர். கணவர் யோகேஷ் உட்பட குடும்பத்தினர் நால்வர் மீது வன்கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.