நண்பருக்கு உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை!

 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, நண்பருக்கு உருக்கமான வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிவிட்டு, என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஒருவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த இலந்தைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை. இவருடைய மகன் சுடலைமுத்து என்ற சுரேஷ் (21). இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சுரேஷ் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மாலை சுமார் 6.10 மணியளவில், தனது நெருங்கிய நண்பரான காளிராஜ் என்பவருக்கு உருக்கமான மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், "என்னுடைய அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க... சந்தோசமா இருங்க... எல்லாரும் ஹாப்பியா இருங்க..." என்று பதிவிட்டிருந்தார்.

இந்த மெசேஜைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர் காளிராஜ், உடனடியாக சுரேஷின் மொபைல் எண்ணிற்குத் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் சுரேஷ் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த காளிராஜ் மற்றும் சுரேஷின் உறவினர்கள் உடனடியாக இலந்தைக்குளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு விரைந்து சென்றனர்.

அங்குச் சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபோது, சுரேஷ் வீட்டிலிருந்த மின்விசிறி மாட்டும் இரும்பு கம்பியில், தாயாரின் சேலையால் தூக்குப்போட்டுத் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அலறியடித்தனர்.

உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று சுரேஷை மீட்டனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரிய வந்தது. இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கயத்தாறு காவல் துறையினர், மாணவர் சுரேஷின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நன்றாகப் படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் சுரேஷ், எதற்காக இந்த முடிவை எடுத்தார்? கல்லூரிப் படிப்பில் ஏதேனும் மன உளைச்சல் இருந்ததா? அல்லது குடும்பப் பிரச்சினையா? என்பது குறித்துக் கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரது செல்போனை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.