தென்பெண்ணையாற்றில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற இன்ஜினியரிங் மாணவர் ஆற்றில் மூழ்கி பலி!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தென்பெண்ணையாற்றில் விநாயகர் சிலையைக் கரைக்கச் சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் மொலங்காரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அச்சுதன் என்பவரது மகன் திலீப் (21). இவர் சேலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. இறுதி ஆண்டு படித்து வந்தார்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திலீப் தனது தந்தை மற்றும் கிராமக் குழுவினருடன் சேர்ந்து போச்சம்பள்ளி அருகே உள்ள தென்பெண்ணையாற்றின் மஞ்சமேடு பகுதிக்கு விநாயகர் சிலையைக் கரைக்கச் சென்றார்.
ஆற்றின் நீரில் இறங்கி சிலையைக் கரைக்க முயன்றபோது, அங்கு ஏற்கனவே இடிக்கப்பட்ட பழைய பாலத்தின் அகற்றப்படாத கான்கிரீட் கம்பிகள் மற்றும் சிமெண்டு இடிபாடுகளில் எதிர்பாராதவிதமாகத் திலீப் சிக்கிக்கொண்டார். இதனால் ஆற்றின் ஆழமான பகுதியில் நீரில் மூழ்கினார்.
உடன் வந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திலீப் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த பாரூர் காவல்துறையினர் மாணவரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.