700-க்கும் மேற்பட்ட நபர்களால் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை... அடுத்தடுத்து அதிர்ச்சி!
இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ் என்பவர் பேசிய பேச்சு உலக நாடுகளை உலுக்கியுள்ளது. அங்குள்ள சில குறிப்பிட்ட கும்பல்களால் வெள்ளையின சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அவர் தனிப்பட்ட முறையில் ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வில் வெளிவந்த மிகக் கொடுமையான தகவல்களை அவர் நாடாளுமன்றத்தில் ஆதாரங்களுடன் பட்டியலிட்டார்.
அவர் வெளியிட்ட தகவலின்படி கர்ப்பிணியாக இருந்த ஒரு இளம்பெண் மட்டும் 600 முதல் 700 ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மேலும் சில சிறுமிகளை நாய் கூண்டுகளில் அடைத்து வேன்களில் கடத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் தங்களை இனம் மற்றும் மத ரீதியாகக் குறிவைத்து இந்த கொடுமைகளை அரங்கேற்றியதாக வேதனையுடன் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கடந்த 2002 ஆம் ஆண்டு முதன்முறையாக வெளிச்சத்திற்கு வந்த இந்த கொடூர கும்பல் பாலியல் சுரண்டல்களில் பாகிஸ்தான் பாரம்பரியத்தைச் சேர்ந்த ஆண்களே அதிகம் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களும் சமூக ஆர்வலர்களும் பலமுறை புகார் அளித்தும் அங்குள்ள அதிகாரிகள் பல ஆண்டுகளாக இந்த வழக்குகளில் உரிய விசாரணை நடத்தாமல் அலட்சியமாக இருந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.