பி.எப். விதிகளில் முக்கிய மாற்றம்: குறைந்தபட்ச இருப்புத்தொகை 10 சதவீதமாக குறைப்பு!

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) திட்டத்தில் முக்கியமான மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பி.எப். சந்தாதாரர்கள் தங்களது சேமிப்புத் தொகையைத் தேவைக்கேற்ப எடுத்துக்கொள்வது எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய விதிகளின்படி, பி.எப். கணக்கில் குறைந்தபட்சம் 25 சதவீதத் தொகையை இருப்பாக வைத்திருக்க வேண்டும். இந்த அளவை 10 சதவீதமாகக் குறைக்க மத்திய அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ஊழியர்கள் தங்களது பி.எப். சேமிப்பில் இருந்து கூடுதல் தொகையைத் தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ள முடியும்.

மேலும், வேலை இழக்கும் ஊழியர்கள் தங்களது பி.எப். கணக்கில் உள்ள முழுத் தொகையையும் திரும்பப் பெறுவதற்கான காத்திருப்பு காலத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது 12 மாதங்களாக உள்ள காத்திருப்பு காலம் 2 மாதங்களாகக் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும்போது, வேலை இழக்கும் ஊழியர்கள் நீண்ட காலம் காத்திருக்காமல் தங்களது பி.எப். சேமிப்புத் தொகையைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். பி.எப். சந்தாதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.