BREAKING... 12 ஆண்டுகளுக்கு பிறகு EPFO சம்பள வரம்பு ரூ.25,000 ஆக உயர்வு! யாருக்கெல்லாம் என்ன பயன்?

 

 

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (PF) தொடர்பாக மத்திய அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. EPFO-வில் கட்டாயமாக சேருவதற்கான மாத ஊதிய வரம்பை ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் நாடு முழுவதும் 51 லட்சத்துக்கும் மேற்பட்ட கூடுதல் ஊழியர்கள் EPFO சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் வருவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

யாருக்கு இந்த புதிய PF விதி பயன் தரும்?

தற்போதைய ரூ.15,000 வரம்பை விட அதிகமாக அடிப்படை ஊதியம் பெறுவதால் கட்டாய EPFO வரம்புக்கு வெளியே இருந்த சில ஊழியர்கள், புதிய ரூ.25,000 வரம்பின் மூலம் கட்டாய PF பாதுகாப்புக்குள் வர வாய்ப்பு உள்ளது.இதன் மூலம் PF சேமிப்பு மட்டுமின்றி, தொடர்புடைய ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு சமூகப் பாதுகாப்பு பலன்களும் அதிகமான ஊழியர்களை சென்றடையும் என அரசு தெரிவித்துள்ளது.

 புதிய வரம்பு அமலுக்கு வந்தால், மாத அடிப்படை ஊதியம் ரூ.25,000 வரை உள்ள ஊழியர்கள் கட்டாய EPFO கவரேஜுக்குள் வருவார்கள்.PF என்பது ஊழியரின் சம்பளத்தில் இருந்து செய்யப்படும் ஓய்வுக்கால சேமிப்பு என்பதால், சில ஊழியர்களுக்கு எதிர்கால சேமிப்பு அதிகரிக்கலாம். அதே நேரத்தில், PF பங்களிப்பு அதிகரிக்கும் சூழலில் சம்பளத்தில் கைக்கு வரும் தொகையில் மாற்றம் ஏற்படக்கூடும்.

 EPFO ஊதிய வரம்பில் இந்த மாற்றம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு செய்யப்படுகிறது. கடந்த 2014-ல் ரூ.6,500-ல் இருந்து ரூ.15,000 ஆக வரம்பு உயர்த்தப்பட்டது. தற்போது அது ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த முடிவால் கூடுதலாக 51 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் EPFO கட்டாய கவரேஜுக்குள் வருவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய விதியை நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொழிலாளர் அமைச்சகம் மற்றும் EPFO மேற்கொள்ளும்.