"அபராத தொகையை போலீசார் வட்டிக்கு விடுகிறார்கள்" - சட்டப்பேரவையில் இபிஎஸ் குற்றச்சாட்டு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, காவல்துறையின் செயல்பாடு மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்தும் பல்வேறு முக்கியக் கோரிக்கைகளையும் குற்றச்சாட்டுகளையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்வைத்துள்ளார்.
பெண் காவலர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இரவு நேரப் பணியைத் முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தைப் போலவே, தவெக அரசும் காவலர்களுக்குத் தொடர் புத்தாக்கப் பயிற்சிகளை வழங்க வேண்டும் என்றார்.
நகர் மற்றும் நெடுஞ்சாலைகளில் மோட்டார் சைக்கிள் பந்தயங்களை (பைக் ரேஸ்) தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், உரிய பராமரிப்பு இல்லாமல் தூசு படிந்து கிடக்கும் சிசிடிவி கேமராக்களை உடனடியாகச் சீரமைத்துச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் அபராதப் பணத்தை காவல்துறையினர் சிலர் வட்டிக்கு விடுவதாகப் புகார்கள் வருவதாகவும், இதுபோன்ற முறைகேடுகளை அரசு உடனடியாகக் கண்காணித்துத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கடுமையாகக் குறிப்பிட்டார்.