குஷியில் ஈபிஎஸ்... அதிமுக கூட்டணிக்கு 150 இடங்கள்? மே 9-ல் பதவியேற்பு விழா?!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து முடிவுகளுக்காகக் காத்திருக்கும் வேளையில், அதிமுக பாசறையில் நிலவும் உற்சாகம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்ற தேர்தல் குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மூன்று நாட்களாகத் தேர்தல் வியூக வகுப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்தத் தரவு ஆய்வுகளின் அடிப்படையில், அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 150 தொகுதிகள் வரை கைப்பற்றும் எனத் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுக-வின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்திலும், கூட்டணிக் கட்சிகளின் பலம் உள்ள தென் மாவட்டங்களிலும் அதிக இடங்களை வெல்ல முடியும் என அக்கட்சி நம்புகிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் மற்றும் புதிய கட்சிகளின் வரவால் பிரிந்த வாக்குகள் தங்களுக்குச் சாதகமாக அமையும் என அவர்கள் கணிக்கின்றனர்.
தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பெரும் நம்பிக்கையுடன் இருக்கும் அதிமுக தலைமை, ஒருவேளை வெற்றி உறுதியானால் அடுத்தகட்ட நகர்வுகளை இப்போதே திட்டமிடத் தொடங்கிவிட்டது. அதன்படி, மே 9-ம் தேதி பதவியேற்பு விழாவைப் பிரம்மாண்டமாக நடத்தத் தோராயமான தேதி குறிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே தவெக மற்றும் திமுக கூட்டணிகள் தங்களுக்குச் சாதகமான கணிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது அதிமுக-வும் 150 தொகுதிகள் என்ற இலக்கை எட்டும் என உறுதியாகக் கூறி வருவது தேர்தல் களம் மே 4-ம் தேதியை நோக்கிப் பெரும் எதிர்பார்ப்புடன் நகரத் தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது.