டெங்கு பாதிப்பால் 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 மாத கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொடக்குறிச்சியைச் சேர்ந்த 39 வயதான காந்திமதி, 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து முதலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி காந்திமதி உயிரிழந்தார்.
இதுகுறித்து மாவட்ட சுகாதார அலுவலர் அருணா கூறுகையில், உயிரிழந்த காந்திமதியின் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரத்துறையினர் நேரில் ஆய்வு செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அப்பகுதியில் கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், டெங்கு தடுப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்