ஈரோடு கிழக்கு தொகுதியில் கள்ள ஓட்டுப் புகாரால் அதிர்ச்சி - 49P விதியைப் பயன்படுத்திய வாக்காளர்!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குமலன்குட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று மதியம் வாக்களிக்க வந்த இளைஞர் ஒருவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி, அங்குச் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர், இன்று மதியம் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்குச் சென்றுள்ளார். அவர் தனது ஆவணங்களைச் சமர்ப்பித்தபோது, அவரது பெயரில் ஏற்கனவே ஒரு வாக்கு பதிவாகிவிட்டதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "நான் இப்போதுதான் வாக்குச்சாவடிக்கே வருகிறேன், அதற்குள் எப்படி என் வாக்கு பதிவாகும்?" என தினேஷ் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டுப் புகார் அளித்தார்.
இது குறித்துத் தகவல் அறிந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அர்பித் ஜெயின், உடனடியாக விசாரணை நடத்தினார். தினேஷின் அடையாளச் சான்றுகள் உண்மையானது என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் விதி 49P (Section 49P)-ன் கீழ் அவருக்கு 'டெண்டர் ஓட்டு' அளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம், இயந்திரத்தில் ஏற்கனவே பதிவான வாக்கை விடுத்து, தினேஷ் தனது வாக்கினைத் தனியாகப் பதிவு செய்தார்.
இன்று காலை சென்னை மதுரவாயல் தொகுதியில் உமா மகேஷ்வரி என்ற பெண்ணின் வாக்கு ஏற்கனவே பதிவானதாகப் புகார் எழுந்த நிலையில், தற்போது ஈரோட்டிலும் அதே போன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பது தேர்தல் பாதுகாப்பு மற்றும் அடையாளச் சரிபார்ப்பு முறைகள் குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளது.