குரூப் 2 தேர்வு எழுதச் சென்ற வனக் காப்பாளர் பலி! பர்கூர் மலைப்பாதையில் கோர விபத்து!
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வனக் காப்பாளராகப் பணியாற்றி வந்த 27 வயது இளைஞர், குரூப் 2 தேர்வு எழுதச் சென்றபோது நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தியூரில் வனக் காப்பாளராகப் பணியாற்றி வந்த நவீன், இன்று (நவம்பர் 1) குரூப் 2 தேர்வில் பங்கேற்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார். பர்கூர் மலைப்பாதையில் நெய்கரை என்ற இடத்தில் உள்ள வளைவில் திரும்ப முயன்றபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக அவரது இருசக்கர வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வு எழுதச் சென்ற இளைஞர் விபத்தில் உயிரிழந்த செய்தி அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து சரக்கு வாகன ஓட்டுநர் மற்றும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.