காவலாளி மாத சம்பளத்தில் லஞ்சம் கேட்ட பெண் பிடிஓ கைது !
ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிடிஓவாகப் பணியாற்றி வருபவர் லதா (55). அதே அலுவலகத்தில் ஒப்பந்த இரவு நேர காவலாளியாக சண்முகசுந்தரம் (55) என்பவர் தினசரி ஊதிய அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார். அலுவலகத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை மிரட்டி மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை அவர் லஞ்சமாகப் பெற்று வந்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன.
லஞ்சம் தராத தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கி விடுவதாக அவர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த நிலையில் காவலாளி சண்முகசுந்தரத்திடம் அவரது மாதச் சம்பளத்தில் இருந்து ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாகத் தருமாறு பிடிஓ லதா கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் இது குறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார்.லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சண்முகசுந்தரம் பிடிஓ லதாவிடம் வழங்கியபோது போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். அலுவலகத்திலேயே லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது