'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' - 4.41 லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்ய இ-டெண்டர் வெளியீடு; ஆகஸ்ட் 17 வரை விண்ணப்பிக்கலாம்!

 

தமிழக முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான ஒன்றான, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்கம் வழங்கும் ‘முதலமைச்சரின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான’ அதிகாரப்பூர்வ இ-டெண்டர் அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கூட்டுத்தாபனம் மூலமாகத் திட்டத்திற்கான கொள்முதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாகத் தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்காக மொத்தம் 4,41,667 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

கொள்முதல் செய்யப்படும் அனைத்து மோதிரங்களும் கட்டாயமாக 916 ஹால்மார்க் முத்திரையுடன், தலா ஒரு கிராம் எடையில் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,725 என்ற அடிப்படை விலையின் கீழ் இந்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

இத்திட்டத்தைச் சீரிய முறையில் செயல்படுத்துவதற்காகத் தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இ-டெண்டர் விதிமுறைகளின்படி தகுதியும், முறையான சான்றிதழ்களும் கொண்ட பெரிய நகை விநியோகஸ்தர்கள் மற்றும் நிறுவனங்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதியான நிறுவனங்கள் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாகத் தங்களது டெண்டர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15, 2026 அன்று இந்தத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்.

கடந்த ஜூன் 22ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும், தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் இந்த ஒரு கிராம் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. ஏற்கனவே அமலில் இருக்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்துடன் இணைந்து, இந்தத் திட்டமும் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஏழை எளிய தாய்மார்களுக்குப் பெரும் பொருளாதார ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.