"சர்க்கரை விலை உயர்வுக்கும் எத்தனாலுக்கும் தொடர்பில்லை" - மத்திய அரசு விளக்கம்!
நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதற்கு எத்தனால் உற்பத்திக்குச் சர்க்கரையைப் பயன்படுத்துவது காரணம் அல்ல என்று மத்திய உணவுத்துறைச் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் ஆண்டிற்குத் தேவையான சர்க்கரையின் நுகர்வு சுமார் 280 முதல் 290 லட்சம் டன்களாக உள்ள நிலையில், நடப்பு ஆண்டில் சர்க்கரை உற்பத்தி 306 லட்சம் டன்னாக உள்ளது. இதனால் பண்டிகைக் காலத் தேவைக்கு நாட்டின் சர்க்கரை கையிருப்பு போதுமானதாக உள்ளது.
நடப்பாண்டில் எத்தனால் தேவைக்காக வெறும் 28 லட்சம் டன் (சுமார் 9%) சர்க்கரை மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் எத்தனால் உற்பத்திக்காகப் பெருமளவில் சோளம் போன்ற தானியங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கரும்புப் பயிர்களில் ஏற்பட்ட 'செவ்வழுகல்' போன்ற நோய் பாதிப்புகள் மற்றும் அதிக மழையினால் ஏற்பட்ட பயிர்ச்சேதம் காரணமாகச் சர்க்கரை உற்பத்தி தொடக்கக் கணிப்பை விடக் குறைந்துள்ளது. வரவிருக்கும் பண்டிகைக் காலத்தின் அதிகத் தேவை, சர்வதேசச் சந்தையில் சர்க்கரையின் தட்டுப்பாடு மற்றும் சில வியாபாரிகளின் பதுக்கல் நடவடிக்கைகளே சர்க்கரை விலை உயர்விற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்தவும் பதுக்கலைத் தடுக்கவும் மொத்த வியாபாரிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக உணவுத் துறை தெரிவித்துள்ளது.