"மரணமே வந்தாலும் என் சொந்த மண்ணில் நிகழட்டும்"... வங்கதேசம் திரும்புகிறார் ஷேக் ஹசீனா; நீதிமன்றத்தில் சரணடைய திட்டம்!

 

வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மாணவர் போராட்டங்களை அடக்குமுறையால் ஒடுக்கிய வழக்கில் அந்நாட்டு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, இந்தியாவில் தற்காலிகமாகத் தஞ்சமடைந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, வரும் டிசம்பர் மாதம் மீண்டும் வங்கதேசம் திரும்ப திட்டமிட்டுள்ளார்.

வங்கதேச வரலாற்றில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்த ஷேக் ஹசீனா, அந்நாட்டில் வெடித்த மாபெரும் மக்கள் மற்றும் மாணவர் புரட்சியைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த 2024 ஆகஸ்டில் அவசரமாக இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். 

ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் மனித உரிமை மீறல் வழக்குளை விசாரித்த வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், அவருக்கு அண்மையில் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக புதுடெல்லியில் உள்ள மத்திய அரசின் பாதுகாப்பான இடத்தில் அவர் தற்பொழுது தங்கியுள்ளார். இந்நிலையில், இடைக்கால அரசு மற்றும் புதிய அரசியல் சூழல்களுக்கு மத்தியில் அவர் மீண்டும் தாய்நாடு திரும்ப முடிவு செய்துள்ளார்.

வங்கதேசத்தில் தனக்கு எதிராக நிலவும் கடுமையான அரசியல் மற்றும் சட்டம்-ஒழுங்கு அச்சுறுத்தல்களையும் மீறி ஷேக் ஹசீனா இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வங்கதேசம் திரும்புவது குறித்துத் தனது நெருங்கிய ஆதரவாளர்களிடம் பேசியுள்ள ஷேக் ஹசீனா, "நான் வங்கதேசம் சென்றதும் தற்போதைய அரசால் உடனடியாகக் கைது செய்யப்படலாம் அல்லது தீவிரவாதிகளால் கொல்லப்படலாம் என்ற கடுமையான சூழல் இருப்பதை நான் அறிவேன். இருப்பினும், எனக்கு மரணம் என்று ஒன்று வந்தால், அது என் சொந்த மண்ணிலேயே நிகழ வேண்டும்" என உருக்கமாகக் கூறியுள்ளார்.

இந்த உறுதியான முடிவின் அடிப்படையில், வரும் டிசம்பர் மாதம் அவர் டாக்காவிற்கு விமானம் மூலம் நேரடியாகச் சென்று, அங்குள்ள உச்ச நீதிமன்றத்தில் சட்டப்படி சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷேக் ஹசீனா வங்கதேசம் திரும்பவுள்ள செய்தி வெளியானதைத் தொடர்ந்து, டாக்காவில் உள்ள அவரது கட்சித் தொண்டர்கள் மற்றும் தற்போதைய இடைக்கால அரசின் ஆதரவாளர்களிடையே மீண்டும் மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

வங்கதேசத் தலைநகர் டாக்கா மற்றும் எல்லைப் பகுதிகளில் எவ்வித அசம்பாவிதங்களும், சட்டம்-ஒழுங்குச் சலசலப்புகளும் ஏற்படாமல் தடுக்க அந்நாட்டு ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவு போலீசார் தற்பொழுதே அலர்ட் செய்யப்பட்டுள்ளனர். டாக்காவில் உள்ள நீதிமன்ற வளாகங்கள் மற்றும் தூதரகப் பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுத் தீவிரக் கண்காணிப்புப் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய-வங்கதேச எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.