undefined

"என் மகள் பிழைச்சாலும் அவள யார் கல்யாணம் பண்ணிப்பா”... மணமேடையில் சுடப்பட்ட பெண்ணின் தந்தை கண்ணீர்!

 

பீகார் மாநிலத்தில் திருமண மேடையிலேயே மணப்பெண் சுடப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் தந்தை, ‘இனி  என் மகள் பொழைச்சாலும் யார் அவளைத் திருமணம் செய்துக் கொள்வார்கள்” என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். 

பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி இரவு நடைபெற்ற திருமண விழாவில் இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 18 வயது இளம்பெண் ஆர்த்தி குமாரிக்கும், ஒரு இளைஞருக்கும் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மணமேடையில் வைத்து ஆர்த்தி துப்பாக்கியால் சுடப்பட்டார்.

அரியூர் பகுதியைச் சேர்ந்த தீபந்து என்ற இளைஞர் ஆர்த்தியை நீண்ட நாட்களாக ஒருதலைப்பட்சமாகக் காதலித்து வந்துள்ளார். ஆர்த்திக்கு ஏற்கனவே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதும், தீபந்துவின் மிரட்டலால் அந்தத் திருமணங்கள் நின்று போயுள்ளன. தற்போதைய திருமணத்தின் போது, உறவினர்கள் சூழ ஆர்த்தி மணமேடையில் நின்றிருந்தபோது கூட்டத்திற்குள் புகுந்த தீபந்து, ஆர்த்தியை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். இதில் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்த ஆர்த்தி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். தப்பியோடிய தீபந்துவை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இவர் ஏற்கனவே மதுபானக் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்த்தி தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தனது மகள் ஒருபோதும் தீபந்துவை விரும்பியது இல்லை என்று கூறும் அவரது தந்தை, தற்போது மற்றொரு பெரிய கவலையில் ஆழ்ந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு, ஆர்த்தியின் கடந்த காலம் (ஒரு நபர் காதலித்தது) பற்றித் தெரிந்திருந்தால் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்திருக்க மாட்டோம் என மணமகன் வீட்டார் கூறியுள்ளனர். மேலும், தங்கள் மகன் மீது குண்டு பாய்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

"என் மகள் உயிர்பிழைத்து வந்தாலும், அவளை இனி யார் திருமணம் செய்து கொள்வார்?" என்று ஆர்த்தியின் தந்தை கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருதலைக் காதலால் ஒரு பெண்ணின் உயிரும், அவரது எதிர்காலமும் சிதைக்கப்பட்டுள்ள இந்தச் சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பையும் சமூக வலைதளங்களில் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.