பெற்றோர்கள் சம்மதித்தாலும் அனுமதியில்லை... ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை!

 

ஐக்கிய அரபு அமீரகத்தில்குழந்தைகளின் மனநலனைப் பாதுகாக்கவும், ஆன்லைன் அச்சுறுத்தல்களில் இருந்து அவர்களைக் காக்கவும் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு நாடாளுமன்ற ரீதியாகக் குறைந்தபட்ச வயது வரம்பை நிர்ணயித்த முதல் அரபு நாடு என்ற பெருமையை ஐக்கிய அரபு அமீரகம் பெற்றுள்ளது.

புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள இந்தச் சட்டத்தின்படி, முகநூல், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் யூடியூப்  உள்ளிட்ட எந்தவொரு சமூக ஊடக தளங்களிலும் 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் தங்களது சொந்தக் கணக்குகளைத்  தொடங்கவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.

பொதுவான பதிவுகளைப் பார்ப்பது, கருத்துகளைப் பதிவிடுவது, பிறருக்குப் பகிர்வது மற்றும் பொதுக் குழுக்களில் இணைவது போன்ற அனைத்துச் செயல்பாடுகளுக்கும் இதில் முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, இந்த விவகாரத்தில் பெற்றோர்களின் தனிப்பட்ட சம்மதம் இருந்தாலும் கூட, 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்குச் சமூக வலைத்தள கணக்குகளை உருவாக்க அனுமதி கிடையாது எனச் சட்டம் தெளிவுபடுத்தியுள்ளது.

இச்சட்டத்தின் கீழ் 15 முதல் 16 வயதுடைய பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்ள சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வயதினருக்கு அவர்களின் வயதுக்கு ஏற்ற பாதுகாப்பான உள்ளடக்கங்கள் மட்டுமே திரையில் காண்பிக்கப்பட வேண்டும்.

அடையாளம் தெரியாத மாற்று நபர்கள் அல்லது அந்நியர்களுடன் அவர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்வது மற்றும் உரையாடுவதைத் தடுக்கும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அவர்கள் சமூக வலைத்தளங்களில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்த 'ஸ்கிரீன் டைம்'மற்றும் பெற்றோர்கள் கண்காணிப்பதற்கான பிரத்யேகக் கருவிகள் கட்டாயமாக்கப்படும்.

இனிமேல் பயனர்கள் தங்களது பிறந்த தேதியைத் தாங்களாகவே பதிவிட்டு வயதுச் சான்று காட்டும் எளிய 'Self-declaration' முறையைச் சமூக ஊடக நிறுவனங்கள் ஏற்கக் கூடாது என அமீரக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்குப் பதிலாக, பயனர்களின் டிஜிட்டல் அடையாள அட்டை அல்லது செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயோமெட்ரிக் தொழில்நுட்பங்கள் மூலம் உண்மையான வயதைச் சரிபார்ப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இந்த விதிகளுக்குப் பொருந்திப் போகவும், தற்போதுள்ள 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் கணக்குகளைக் கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக முடக்கவும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு 12 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் அல்லது பயனர்கள் வயதை மறைத்து ஏமாற்றுவதைக் கண்டுகொள்ளாத நிறுவனங்களின் சேவைகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தடை செய்யப்படும் எனத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.