"ஒவ்வொரு ரூபாயிலும் 22.8 பைசா வட்டிக்கே செலவாகிறது.." - நிதியமைச்சர் மரிய வில்சன்!
தமிழகத்தின் அனைத்துத் துறைகளின் நிதிநிலை மற்றும் முந்தைய நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தவெக அரசு பதவியேற்ற போது உறுதியளித்திருந்தார். அதன்படி, தமிழக அரசின் நிதி நிலை குறித்த அதிகாரப்பூர்வ வெள்ளை அறிக்கையை இன்று மாலை வெளியிட்ட நிதியமைச்சர் என். மரிய வில்சன், முந்தைய ஆட்சியின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் தமிழகம் சந்தித்துள்ள கடுமையான நிதிச் சுமையின் விபரங்களை வெளியிட்டார்.
செய்தியாளர் சந்திப்பில் நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட தகவல்களில், தமிழக அரசுக்குக் கிடைக்கும் ஒட்டுமொத்த வருவாயில், ஒவ்வொரு ஒரு ரூபாயிலும் 22.8 பைசா முந்தைய அரசு வாங்கிய கடனுக்கான வட்டியைச் செலுத்துவதற்கே செலவாகிறது. இது மாநிலத்தின் புதிய வளர்ச்சித் திட்டங்களை முடக்கியுள்ளது.
தமிழக அரசின் நேரடிக் கடன் மட்டும் ரூ. 10 லட்சம் கோடியாக உள்ள நிலையில், பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்தால், மாநிலத்தின் உண்மையான ஒட்டுமொத்தக் கடன் சுமை ரூ. 13.18 லட்சம் கோடி என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வரி வருவாய் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளதால், மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ. 78,324 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து வருட ஆட்சி மாற்றத்தில் தமிழக மக்களின் மீதான தனிநபர் கடன் சுமை எவ்வாறு உயர்ந்துள்ளது என்பதையும் அமைச்சர் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார்:
கடந்த 2020-21 நிதியாண்டில், தமிழகத்தில் உள்ள ஒரு தனிநபர் மீதான மறைமுகக் கடன் சுமை ரூ. 67,087 ஆக இருந்தது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் இந்தக் கடன் சுமை கிட்டத்தட்ட இரட்டிப்பாகி, தற்போதைய நிலவரப்படி ரூ. 1,28,934 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் சொந்த வரி வருவாயை விடக் கடனும், அதற்கான வட்டியும் மிக வேகமாக உயர்ந்து வருவது மாநிலத்தின் எதிர்காலப் பொருளாதாரத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு, இந்த நிதி நெருக்கடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுப்பதற்கான தீவிர பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.