இனி எல்லாமே மாறப் போகுது... தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 % ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவு!
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வரும் சூழலில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு இன்று உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இதுவரை 6 சதவீதமாக இருந்த இறக்குமதி வரி, தற்போது 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதால், சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாகச் சரிந்து வருவதால், சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிநாட்டு சுற்றுலாக்கள் மற்றும் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து, தங்கம் வாங்குவதைக் குறைத்துக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதால், பொருளாதாரச் சூழலைச் சமாளிக்கவே இந்த வரி உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே தங்கத்தின் விலை உச்சத்தில் உள்ள நிலையில், இந்த விலை உயர்வு சாமானிய மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நுகர்வோருக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது.