“ஆட்சிக்கு வந்த ஆறே மாசத்துல எல்லாமே நாசம்” - ஸ்டாலின் கடும் விமர்சனம்!

 

தவெக அரசு பொறுப்பேற்று ஆறே மாதங்களில் தமிழகத்தின் வளர்ச்சி பின்னோக்கிச் செல்வதாகவும், நிர்வாகத்தில் எந்தவொரு நிலையான முடிவும் இல்லாமல் 'யூ-டர்ன்' போடும் போக்கு நிலவுவதாகவும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஏராளமான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை உருவாக்கி, கல்வியில் சிறந்த மாநிலமாகத் தமிழகத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கியதாகக் குறிப்பிட்டார். மேலும், படிப்பு முடித்த திறமையான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழில் நிறுவனங்களைத் தாங்கள் கொண்டு வந்ததாகவும், அதன் பலனாகத் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னணி மாநிலமாக உயர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வளர்ச்சிப் பயணத்தில் எதிர்கொண்ட தடைகளை இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமை தங்களுக்கு உள்ளதாகக் கூறிய அவர், இத்தனை ஆண்டுகள் பாடுபட்டு உருவாக்கிய வளர்ச்சி இந்த ஆறு மாதங்களில் பின்னோக்கிச் செல்வது தனக்கு வருத்தமளிப்பதாகக் கூறினார்.

தவெக அரசால் ஒரு விஷயத்தில்கூட உறுதியாக இருக்க முடியவில்லை எனச் சாடிய மு.க. ஸ்டாலின், ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டு அவர்களே அதனை ரத்து செய்வதாகவும், எல்லா விஷயத்திலும் 'யூ-டர்ன்' போடும் நிலைதான் இருப்பதாகவும் விமர்சித்தார்.

ஆட்சியாளர்களே செய்திகளைக் கசிய விடுவதாகவும், அதற்கு மக்களிடையே எதிர்ப்பு கிளம்பினால் அவர்களே அது உண்மையில்லை என மறுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இத்தகைய செயல்பாடுகளால் அண்டை மாநிலங்கள் தமிழகத்தைக் கேலியாகப் பார்க்கும் சூழல் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் தமிழகம் பின்னோக்கி செல்வதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், தற்போதைய ஆட்சியில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் போட்டி நிலவுவதாகவும், போதைப்பொருள் நடமாட்டத்திற்கும் வன்கொடுமைகளுக்கும் போட்டி நடப்பதாகவும் விமர்சித்தார்.

அரசு உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்குத் தொல்லை கொடுப்பதில் அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே போட்டி நிலவுவதாகவும் அவர் சாடினார். ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் எல்லாமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், த.வெ.க. என்பது அரசியல் பிணி மட்டுமல்ல, அது ஒரு சமூகப் பிணி என்பதையும் மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்துள்ளார்.