"எங்கு திரும்பினாலும் ஊழல்களும் முறைகேடுகளும்".. “தூயசக்தி”யின் ஊழல் வேட்டை ஆரம்பமாகிறதா? - நயினார் நாகேந்திரன்!
தவெக அரசுக்கு எதிராகப் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் நியமனங்களில் தவெக அரசு பல்வேறு குளறுபடிகளைச் செய்து வருவதாகக் குற்றம்சாட்டி, தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பல்வேறு வினாக்களை எழுப்பியுள்ளார்.
தமிழக அரசின் தற்போதைய செயல்பாடுகளை விமர்சித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு வேலைகளைத் தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டிப்படைக்கும் தவெக அரசின் ஆணவப் போக்குக் கடும் கண்டனத்திற்குரியது. தூயசக்தியின் ஊழல் வேட்டை தற்பொழுது ஆரம்பமாகிறதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக ஆட்சியில் எங்கு திரும்பினாலும் ஊழல்களும் முறைகேடுகளும் மட்டுமே கொடிகட்டிப் பறப்பதாகக் குறிப்பிட்டுள்ள நயினார் நாகேந்திரன், பின்வரும் விபரங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
"உதவிப் பேராசிரியர் தேர்வில் தொடர்ந்து குளறுபடிகள் நடந்து வருகின்றன. அரசு வழக்கறிஞர்களின் நியமனத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் அரங்கேறியுள்ளது. தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே அரசுப் பதவிகளை வாரி வழங்குவது எனப் பல்வேறு முறைகேடுகள் தவெக ஆட்சியில் நடக்கின்றன. இந்த முறைகேடுகள் அனைத்தையும் முதலமைச்சர் உடனடியாக முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.