விருத்தாசலத்தில் பரபரப்பு... காவல் நிலையத்தில் வெடித்த செல்போன்!
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்க வந்த நபர் ஒருவரின் செல்போன் திடீரென வெடித்துச் சிதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில் இன்று காலை இந்த பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாகப் பாதிக்கப்பட்ட நபர் காயமின்றி உயிர் தப்பியுள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்திற்குப் புகார் அளிப்பதற்காக நபர் ஒருவர் வந்திருந்தார். அவர் தனது கையில் Vivo Y60 ரக செல்போனைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். சிறிது நேரம் போனைப் பயன்படுத்திவிட்டுத் தனது சட்டைப் பாக்கெட்டில் வைத்துள்ளார். அப்போது திடீரென செல்போன் அதிகப்படியான வெப்பமடைவதைஉணர்ந்துள்ளார். உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட அவர், போனை பாக்கெட்டில் இருந்து எடுத்து வெளியே தூக்கி வீசினார். அவர் தூக்கி வீசிய அடுத்த சில நொடிகளில் அந்தச் செல்போன் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி, முற்றிலும் எரிந்து சாம்பலானது. பாதிக்கப்பட்ட நபர் செல்போன் சூடாவதை உணர்ந்த உடனே அதனைத் தூக்கி எறிந்ததால், அவருக்குப் பெரிய அளவிலான தீக்காயங்கள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
காவல் நிலைய வளாகத்திற்குள் திடீரெனப் புகை மூட்டத்துடன் செல்போன் வெடித்ததால் அங்கிருந்த மற்ற பொதுமக்களும், போலீசாரும் சிறிது நேரம் அதிர்ச்சியில் உறைந்தனர். தற்போது கோடைக்காலம் தொடங்கி வெப்பநிலை அதிகரித்து வருவதால், மின்னணு சாதனங்கள் எளிதில் வெப்பமடைய வாய்ப்புள்ளது. பாதுகாப்பிற்காகப் பின்வரும் முறைகளைப் பின்பற்றலாம்: செல்போன் வழக்கத்திற்கு மாறாகச் சூடாவதை உணர்ந்தால், உடனடியாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்து அணைத்து வைக்க வேண்டும். தரமற்ற சார்ஜர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்; சார்ஜ் ஏறும்போதே போனைப் பேசுவதோ அல்லது கேம் விளையாடுவதோ ஆபத்தானது. காரின் டேஷ்போர்டு அல்லது ஜன்னல் ஓரம் என நேரடி வெயில் படும் இடங்களில் போனை நீண்ட நேரம் வைக்க வேண்டாம்.