சென்னை பெருநகர எல்லை 5,904 சதுர கி.மீட்டராக விரிவாக்கம் - மாஸ்டர் பிளான் தயாரிக்க ரூ.45.50 கோடி ஒதுக்கீடு!
சென்னை பெருநகரப் பகுதியின் நிர்வாக எல்லையை 5,904 சதுர கிலோமீட்டராக விரிவுப்படுத்தித் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், அப்பகுதிகளுக்கான நீண்டகால ஒருங்கிணைந்த பெருநகர வளர்ச்சித் திட்டத்தைத் தயாரிப்பதற்காக ரூ.45.50 கோடி நிதியையும் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதுவரை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிர்வாக எல்லையானது 1,189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டிருந்தது.
தற்போது காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த கூடுதல் பகுதிகள் இணைக்கப்பட்டு, சென்னை பெருநகரப் பகுதியானது 5,904 சதுர கிலோமீட்டராக பிரம்மாண்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நீண்டகாலத் திட்டத்திற்காக ரூ.45.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகையானது 2026-2027 நிதியாண்டில் ரூ.10 கோடியும், 2027-2028 நிதியாண்டில் ரூ.22 கோடியும், 2028-2029 நிதியாண்டில் ரூ.13.50 கோடியும் என மூன்று கட்டங்களாகப் பிரித்து வழங்கப்படும்.
விரிவாக்கம் செய்யப்பட்ட இந்தப் பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சியை ஏற்படுத்தவும், எதிர்காலத் தேவைகளைத் திட்டமிடவும் சர்வதேச அளவில் நகர்ப்புற திட்டமிடல் ஆலோசனை நிறுவனம் உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் கீழ்க்கண்ட முக்கிய அம்சங்கள் இடம்பெறுகின்றன:
போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம், வீட்டுவசதி மற்றும் குடிநீர் பாதுகாப்பு, வெள்ளத் தடுப்பு மற்றும் கடலோரப் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல், நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களைப் பாதுகாத்தல்
இந்த மாஸ்டர் பிளான் தயாரிப்புப் பணிகளைக் கண்காணிக்கவும், ஆலோசனை நிறுவனத்தின் பணிகளை ஆய்வு செய்யவும் தமிழ்நாடு அரசு மூன்று சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளது: சர்வதேச ஆலோசனை நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும். ஆலோசனை நிறுவனம் சமர்ப்பிக்கும் திட்ட அறிக்கைகளைப் பல்வேறு கட்டங்களில் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கும்.
மாஸ்டர் பிளான் தயாரிப்புப் பணிகளுக்கு வழிகாட்டுவதுடன், பல்வேறு அரசுத் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும்.
இந்த உயர்நிலைக் குழுவிற்குத் தலைமைச் செயலாளர் தலைவராகவும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைச் செயலாளர் உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். மேலும், நிதி, தொழில், சுற்றுச்சூழல், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, போக்குவரத்து, நீர்வளத்துறை உயர் அதிகாரிகள், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.