EXPLAINER: கச்சா எண்ணெய் முதல் 108 டாலர் உச்சம் வரை - அமெரிக்கா - ஈரான் மோதலும் உலகளாவிய பொருளாதாரத் தாக்கமும்!

 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக இல்லாத அளவுக்கு கிடுகிடுவென உயர்ந்து, பீப்பாய் ஒன்று 108 அமெரிக்க டாலரைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையே இந்த திடீர் விலையேற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

உலகின் மொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு பயணிக்கும் மிக முக்கியப் கடல் மார்க்கமான 'ஹோர்முஸ் நீரிணை' (Strait of Hormuz) பகுதியில் தொடர் மோதல்கள் வெடித்துள்ளன. அமெரிக்கப் படைகளும் ஈரானியப் படைகளும் மாறி மாறி மேற்கொண்டுள்ள தாக்குதல்களால் இப்பகுதியில் சரட்டுக் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபடுமோ என்ற அச்சம் உலகளாவிய சந்தையில் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகளையும் ராணுவ நடவடிக்கைகளையும் எதிர்த்து வரும் ஈரான், ஹோர்முஸ் நீரிணையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், விதிமீறல்களில் ஈடுபடும் கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

ஈரானுடன் எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் இடமில்லை என்றும், நவம்பர் மாத இடைக்காலத் தேர்தல்களுக்குப் பின்னரே கச்சா எண்ணெய் விலை குறையும் என்று அமெரிக்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரடி மோதல் போக்கு தணிவதற்கான எந்த அறிகுறியும் இப்போதைக்குத் தெரியவில்லை என்பதே சந்தை வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வானது இந்தியப் பொருளாதாரத்தின் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா அதிகளவில் டாலர்களைச் செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவைச் சந்தித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், பணவீக்க அச்சத்தாலும் இந்தியப் பங்குச்சந்தைகளில் ஏற்ற இறக்கங்களும் பதற்றமான சூழலும் நிலவி வருகின்றன. இந்த நிலை நீடித்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்வதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரக்கூடும் என்ற கவலை மக்களிடையே எழுந்துள்ளது.