போட்றா வெடிய... டெல்லி அரசியலிலும் தடம் பதிக்கும் தவெக... முதல் எம்.பி., யார்?! - விஜய் தீவிர ஆலோசனை!

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாகக் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் நூற்று எட்டு இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக முதலமைச்சராக விஜய் தற்பொழுது பொறுப்பேற்றுள்ளார்.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், தனது திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் ராஜினாமா செய்துள்ளார். இதற்கிடையே, அஇஅதிமுகவைச் சேர்ந்த சி வி சண்முகம் மயிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அவர் வகித்து வந்த டெல்லி மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி) பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.

இதன் காரணமாகத் தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் தற்போது காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு இடத்திற்கான புதிய நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் டெல்லி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட உள்ளது.

தற்போது தமிழகச் சட்டமன்றத்தில் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளதால், காலியாகும் அந்த ஒரு மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மிக எளிதாகக் கிடைக்கும். சட்டமன்றத் தேர்தலில் வென்ற கையோடு டெல்லி நாடாளுமன்றத்திலும் தங்களது முதல் உறுப்பினரை அனுப்பக் கழகத்தின் முக்கிய நிர்வாகி ஒருவரை நிறுத்த முதலமைச்சர் விஜய் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

மாநில அரசியலைத் தொடர்ந்து டெல்லி நாடாளுமன்ற அரசியலிலும் தவெக தடம் பதிக்க உள்ளதால், அந்த முதல் நாடாளுமன்ற உறுப்பினர் யார் என்ற பலத்த எதிர்பார்ப்பு தற்போது அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.