போட்றா வெடிய... அடுத்த முதல்வர் யாரு?! - த்ரிஷா பிறந்தநாளில் தேர்தல் 'ரிசல்ட்'!
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று அறிவித்தார். தமிழகத்தில் ஏப்ரல் 23-ல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஒட்டுமொத்தத் தேர்தல் திருவிழாவின் க்ளைமாக்ஸ் மே 4-ம் தேதி த்ரிஷா பிறந்தநாளன்று வெளியாக உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 824 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. சுமார் 17.4 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற உள்ளனர்.
இதற்காக 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. தேர்தல் பணிகளில் 25 லட்சம் ஊழியர்களும், 8.5 லட்சம் பாதுகாப்புப் படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகத்தின் சட்டப்பேரவை பதவிக்காலம் மே 10-டன் முடிவடையும் நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மொத்தம் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதில் கிராமப்புறங்களில் 44,065 மற்றும் நகர்ப்புறங்களில் 30,967 வாக்குச்சாவடிகள் செயல்படும். முதன்முறையாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும். மேலும், வாக்குச்சாவடிகளில் செல்போன்களைப் பாதுகாப்பாக வைக்கத் தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் இறுதிப் பட்டியலின்படி (SIR 2026), தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள்: 5.67 கோடி பேர். பெண் வாக்காளர்கள்: 2.89 கோடி (ஆண் வாக்காளர்களை விட 12 லட்சம் அதிகம்). ஆண் வாக்காளர்கள்: 2.77 கோடி. மூன்றாம் பாலினத்தவர்: 7,617 பேர். இளைஞர்கள்: முதல்முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர். 20-29 வயதுக்குட்பட்டவர்கள் 1.05 கோடி பேர்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 4-ம் தேதி, தென்னிந்தியாவின் முன்னணி நடிகை த்ரிஷாவின் பிறந்தநாளாகும். திரை உலகமும் அரசியல் உலகமும் ஒரே நாளில் பரபரப்பாகக் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.