சாலைப் பணிக்கான வெடிபொருட்கள் வெடித்து விபத்து... ஆசிரியர்  உட்பட 5 பேர் உடல் சிதறி பலி! 

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காகக் கொண்டு வரப்பட்ட வெடிபொருட்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய கோர விபத்தில், அரசுப் பள்ளி ஆசிரியை மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள அனந்தகிரி மண்டலத்திற்கு உட்பட்ட பினகோட்டா கிராம மலைப்பாதையில், சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காகப் பாறைகளை உடைக்கப் பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட சக்திவாய்ந்த வெடிபொருட்கள் வாகனம் ஒன்றில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், அந்த வாகனத்தில் டீசல் நிரப்பும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாகத் தீப்பொறி ஒன்று உருவாகி, அருகில் இருந்த வெடிபொருட்கள் மீது பரவியுள்ளது. இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் வெடிபொருட்கள் அனைத்தும் பெருத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறின.

இந்த பயங்கர வெடி விபத்தின் வீரியத்தால், சம்பவ இடத்தில் இருந்த வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் 3 கட்டுமானத் தொழிலாளர்கள் உடல் சிதறி துடிதுடித்து உயிரிழந்தனர். அதே சமயத்தில், அந்தச் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் பயணித்த சுனிதா என்ற அரசுப் பள்ளி ஆசிரியை மீதும் வெடிபொருட்களின் சிதறல்கள் பலமாகப் பாய்ந்ததில், அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வெடிவிபத்தின் தாக்கம் காரணமாக அங்கிருந்த 2 கட்டுமான வாகனங்கள் முற்றிலும் தீக்கிரையாகி உருக்குலைந்தன. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினரும் வருவாய்த்துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் கைப்பற்றிய காவல்துறையினர், வழக்கப் பதிவு செய்து பாதுகாப்பு விதிமீறல்கள் ஏதேனும் நடந்துள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.