கிளியைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.21,000 பரிசு - உண்ணாவிரதம் இருக்கும் ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் பாசப் போராட்டம்!

 

மத்தியப் பிரதேசத்தில் காணாமல் போன தனது செல்லக் கிளியைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ.21,000 பரிசுத் தொகை அறிவித்துள்ள ஓய்வுபெற்ற ராணுவ வீரர், கிளி கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாடோல் மாவட்டம், பங்காங்காமேளா பகுதியைச் சேர்ந்த சந்தன் மிஸ்ரா என்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர், 'கோபி' என்ற கிளியை வீட்டில் செல்லமாக வளர்த்து வந்தார். கடந்த சனிக்கிழமை மதியம் வீட்டில் இருந்த 'கோபி' என்ற அந்தக் கிளி திடீரெனப் பறந்து சென்று காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அதனைத் தீவிரமாகத் தேடத் தொடங்கினர்.

கிளியைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு முதலில் ரூ.11,000 சன்மானம் அறிவிக்கப்பட்டது. கிளி கிடைக்காததால், தற்போது அப்பரிசுத் தொகை ரூ.21,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயிர் போல் வளர்த்த கிளி மீண்டும் கிடைக்கும் வரை உணவு உட்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முன்னாள் ராணுவ வீரர் சந்தன் மிஸ்ரா கண்ணீருடன் சபதம் மேற்கொண்டுள்ளார்.

கிளியைத் தேடும் முயற்சிகள் ஒருபுறம் நடக்க, 'கோபி' எவ்வித ஆபத்துமின்றிப் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக, பண்டிதரின் ஆலோசனையின்படி வீட்டில் சிறப்பு 'ஹவன்-பூஜை' மற்றும் சடங்குகளைச் செய்யக் குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். கிளி மீதான இந்த பாசப் போராட்டம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.