எல்பிஜி சமையல் சிலிண்டர் e-KYC கடைசி தேதி நீட்டிப்பு.. வீட்டிலிருந்தபடியே e-KYC செய்வது எப்படி?
எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து ஆகஸ்ட் 15-ம் தேதியை e-KYC நிறைவு செய்வதற்கான கடைசி நாளாக அறிவித்து எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டு வந்ததால், நாடு முழுவதும் உள்ள முகமைகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பிட்ட தேதிக்குள் e-KYC செய்யத் தவறினாலும் எரிவாயு உருளை விநியோகம் உடனடியாக நிறுத்தப்படாது என்றும், வழக்கமான முறையில் சிலிண்டர்களைப் பெற முடியும் என்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்கள் முகமைகளில் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்கவும், அனைவரும் எளிதாக முடிக்கும் வகையிலும் e-KYC நடைமுறையைத் தொடர்ந்து மேற்கொள்ள நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.
சமையல் எரிவாயு மானியத் தொகையைத் தொடர்ந்து பெறவும், தகுதியான பயனாளிகளை உறுதிப்படுத்தவும் இந்த பயோமெட்ரிக் e-KYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்தபடியே e-KYC செய்வது எப்படி?
கூட்ட நெரிசலைத் தவிர்க்க வாடிக்கையாளர்கள் தங்களது கைபேசி செயலிகள் மூலமாகவே e-KYC-ஐ எளிதாகப் பூர்த்தி செய்யலாம்:
இந்தியன் ஆயில் 'IndianOil ONE' செயலி மற்றும் 'Aadhaar Face RD' செயலி மூலம் முக அங்கீகாரச் சரிபார்ப்பு செய்து முடிக்கலாம்.
பாரத் கேஸ் : 'Hello BPCL' செயலி வாயிலாக ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ளலாம்.
ஹெச்பி கேஸ்: 'HP Pay' செயலியப் பயன்படுத்தி e-KYC செய்ய முடியும்.
செயலி மூலம் செய்ய இயலாதவர்கள், எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் வசமுள்ள சாதனம் மூலமாகவோ அல்லது நேரடியாகத் தங்களின் விநியோகஸ்தர் அலுவலகத்திற்குச் சென்றோ e-KYC-ஐ நிறைவு செய்யலாம். கடைசி தேதி ஆகஸ்ட் 23 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.