கொடைக்கானலில் கடுங்குளிர்... உறைபனி அச்சத்தில் மக்கள்!

 

சர்வதேச சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் போதிய அளவு மழை பெய்யாததன் காரணமாக, வழக்கமாக டிசம்பர் மாதத்தில் தொடங்க வேண்டிய குளிர்காலச் சீசன் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இதனால் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மட்டும் நிலவி வந்த கடும் குளிர், தற்போது பகல் நேரத்திலும் நீடித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் குளிர்காலம் வழக்கமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உச்சத்தில் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு பருவநிலை மாற்றங்கள் காரணமாக நவம்பர் மாதத் தொடக்கத்திலேயே குளிர் வாட்டி எடுக்கத் தொடங்கியுள்ளது. பொதுவாக வெயில் அடிக்க வேண்டிய பகல் நேரங்களிலும் கடுமையான நீர்ப்பனியும் குளிரும் நீடித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் பொதுமக்களும் வீடுகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது.

கடும் குளிர் மற்றும் மூடுபனி காரணமாகச் சாலைகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் மக்களின் நடமாட்டம் வழக்கத்தை விடக் கணிசமாகக் குறைந்து காணப்பட்டது. தற்போது நிலவி வரும் சீதோண நிலை மாற்றத்திற்குக் காரணமான எல்நினோ பருவநிலை நிகழ்வு குறித்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எல்நினோ தாக்கத்தின் காரணமாக வரவிருக்கும் டிசம்பர் மாதத்தில் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான உறைபனி தாக்கும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உறைபனி தாக்கம் தீவிரமடைந்தால் மலைக்காய்கறித் தோட்டங்களான உருளைக்கிழங்கு, கேரட், மலைப்பூண்டு உள்ளிட்ட பயிர்கள் கருகிவிடும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகளும், உள்ளூர் பொதுமக்களும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.