நடு வயதினரிடையே  அதிகரிக்கும் கண்புரை   நீரிழிவு நோய் !  

 

இந்தியா முழுவதும் 40 மற்றும் 50 வயதிற்குட்பட்ட நடு வயதினரிடையே கண்புரை   ஏற்படும் விசித்திரமான பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ரத்தத்தில் நீண்டகாலமாக அதிக அளவில் சர்க்கரையின் அளவு நீடிப்பதே இதற்கான முதன்மைக் காரணியாக உருவெடுத்து வருகிறது. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, இந்தியாவில் 10.1 கோடிக்கும் அதிகமானோர் நீரிழிவு நோயுடனும், 13.6 கோடிக்கும் அதிகமானோர் நீரிழிவுக்கு முந்தைய நிலையிலும் உள்ளதால் வரும் காலங்களில் இந்த கண்புரை பாதிப்பு மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கண்ணின் இயற்கை லென்ஸை பாதிக்கும் அதிக ரத்த சர்க்கரை, அது விரைவில் மங்குவதற்கும் பார்வை தெளிவு குறைவதற்கும் காரணமாகிவிடுகிறது. கண்புரையை வயது முதிர்வால் மட்டுமே ஏற்படும் நோயாக இனி கருத முடியாது என்றும், உடல் பருமன் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற குறைபாடுகளும் இளம் வயதிலேயே கண்புரை ஏற்படுவதை ஊக்குவிப்பதாக மருத்துவர்கள் விளக்குகின்றனர். மங்கலான பார்வை, வெளிச்சத்தில் கண் கூசுதல், நிற வேறுபாடுகளைத் தெளிவாகக் காண இயலாமை போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.

இது குறித்து டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் கண் மருத்துவர் சவுந்தரி கூறுகையில், ரத்த சர்க்கரையை முறையாகக் கட்டுப்படுத்தாத நபர்களுக்கே இந்த கண்புரை பாதிப்பு அதிகமாகக் கண்டறியப்படுகிறது என்றார். கணினி, ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் வாகனம் ஓட்டுதல் போன்ற செயல்பாடுகள் உள்ள வேலை செய்யும் வயதினருக்கு இதன் தாக்கம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. எனவே 40 வயதிற்கு மேற்பட்டவர்கள், குறிப்பாக நீரிழிவு உள்ளவர்கள், வருடத்திற்கு ஒருமுறை விரிவான கண் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் தங்களின் பார்வையைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும் என   அறிவுறுத்தியுள்ளார்.