FACT CHECK: பால்கனியில் தொங்கிய குழந்தை.. நிமிஷத்துல நடந்த அதிர்ச்சி... வைரல் வீடியோ உண்மையா?

 

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவைப் பார்த்தாலே நெஞ்சு படபடக்கும் அளவிற்கு ஒரு காட்சி வைரலாகி வருகிறது. உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி கம்பியில் ஒரு சிறு குழந்தை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க, திடீரென ஒரு குரங்கு வந்து குழந்தையை மீட்கும் அந்த வீடியோ தான் இப்போது இணையத்தின் 'டாக் ஆஃப் தி டவுன்'.

அந்த வீடியோவில், ஒரு சிறு குழந்தை பால்கனி கம்பிகளைப் பிடித்துக் கொண்டு உயிருக்கு ஊசலாடியபடி தொங்குகிறது. ஒரு நொடி பிடி நழுவினாலும் விபரீதம் நிச்சயம் என்ற நிலையில், எங்கிருந்தோ வந்த ஒரு குரங்கு மின்னல் வேகத்தில் குழந்தையைத் தூக்கி பால்கனிக்குள் பாதுகாப்பாக அமர வைக்கிறது. இதைப் பார்த்த பலரும், "அந்தக் குரங்கு வடிவில் கடவுளே வந்து குழந்தையைக் காப்பாற்றிவிட்டார்" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.

வீடியோ வைரலான அதே வேகத்தில், அதன் உண்மைத்தன்மை குறித்த கேள்விகளும் எழத் தொடங்கியுள்ளன. தற்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் எதையும் தத்ரூபமாக உருவாக்க முடியும் என்பதால், இது ஒரு 'AI Generated' வீடியோவாக இருக்கலாம் எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர்.

வீடியோவில் உள்ள ஒளி அமைப்பு மற்றும் குரங்கின் அசைவுகள் சற்று செயற்கையாக இருப்பதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். அத்தனை உயரத்தில் குழந்தை தொங்கும்போது, அந்தக் காட்சியைப் படம் பிடித்தவர் ஏன் குழந்தையைக் காப்பாற்ற முயலவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இத்தகைய வீடியோக்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் பார்வைகளை (Views) அதிகரிப்பதற்காகச் 'சிஜி' (CGI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படுகின்றன. எனவே, இதுபோன்ற வீடியோக்களைப் பார்த்து உணர்ச்சிவசப்படுவதைத் தாண்டி, அதன் உண்மைத்தன்மையை ஆராய்வது அவசியம். எது எப்படியோ, நிஜ வாழ்க்கையில் உங்கள் வீட்டு பால்கனிகளில் குழந்தைகளை விளையாட விடும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதே இந்த வீடியோ நமக்குத் தரும் உண்மையான பாடம்!

இந்த வீடியோவை நீங்களும் பார்த்தீர்களா? இது நிஜம் என்று நம்புகிறீர்களா அல்லது நவீனத் தொழில்நுட்பத்தின் கைவரிசை என்று நினைக்கிறீர்களா? இது போன்ற வீடியோக்களில் உள்ள லாஜிக் மீறல்களைக் கவனித்தாலே அது உண்மையா பொய்யா எனத் தெரிந்துவிடும். உதாரணமாக, குரங்கு குழந்தையைத் தூக்கும்போது குழந்தையின் உடல் எடைக்கு ஏற்ப குரங்கின் அசைவுகள் இயல்பாக இருக்கிறதா என்று பாருங்கள். அதே சமயம் பால்கனியில் கம்பியை குழந்தை உடற்பயிற்சி செய்வதைப் போன்று எந்த பக்கமாக பார்த்தப்படி பிடித்திருக்கிறது என்பதையும் மறுமுறை வீடியோவில் கவனியுங்கள். மற்றபடி, ஆபத்தான நேரங்களில் வீடியோ எடுப்பதை விட உயிரைக் காப்பதே முதல் கடமை! பாதுகாப்பாக இருப்போம்.