கோஷ்டி மோதலால் விபரீதம்...   தவெக பிரமுகர் கத்தி மற்றும் சுத்தியலால் அடித்துக் கொலை!

 

 

சென்னை புதுவண்ணாரப்பேட்டை இந்திரா நகரைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் ஆனந்த் ஆகிய தவெக உறுப்பினர்கள், ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து 500 க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுத் தந்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யும் அதிமுகவைச் சேர்ந்த அகிலாவின் மகன்கள் நரேன், நவீன் ஆகியோருக்கும் இவர்களுக்கும் இடையே உட்கட்சி மற்றும் போதைப்பொருள் விவகாரத்தில் கடுமையான முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில் மணிகண்டனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அவரது மைத்துனரும் ஆட்டோ ஓட்டுநருமான இருபத்தாறு வயது விஷ்ணு என்பவர் கடந்த வாரம் நவீன் கும்பலுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்த புகாரைப் பெற்ற புதுவண்ணாரப்பேட்டை போலீஸார் இரு தரப்பையும் அழைத்துச் சமரசம் பேசி அனுப்பி வைத்த நிலையில், நேற்று முன்தினம் இரவு விஷ்ணுவை நரேன், நவீன், சுகுமார், காளிஷா, குள்ள பிரசாத் ஆகியோர் அடங்கிய கும்பல் கத்தி மற்றும் சுத்தியலால் கொடூரமாகத் தாக்கியுள்ளது. இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டுச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட விஷ்ணு தற்பொழுது சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த மரணச் செய்தியை அறிந்த உறவினர்கள் போலீஸாரின் அலட்சியத்தைக் கண்டித்துப் புதுவண்ணாரப்பேட்டை வள்ளலார் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசியதைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். விஷ்ணுவைத் தாக்கிய வழக்கில் தொடர்புடைய நரேன், நவீன், சுகுமார், காளிஷா மற்றும் குள்ள பிரசாத் ஆகிய ஐந்து பேரையும் போலீஸார் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.