பாதுகாப்பு அதிகாரியின் உளவாளி எனக் கூறிய போலி ஐஏஎஸ் அதிகாரி ரூ100 கோடி மோசடி!
பீகார் மாநிலம் ககாரியா மாவட்டம் கோக்ரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் மாவட்ட புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இந்திய அரசு எனக் குறிப்பிடப்பட்ட பெயர்ப் பலகையுடன் வந்த ஒரு வாகனத்தைச் சந்தேகத்தின்பேரில் நிறுத்திப் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்த வாகனத்தில் வந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ரகசிய உளவாளி என்றும் ஐஏஎஸ் அதிகாரி என்றும் கூறி மிரட்ட முயன்றார்.
அவர் மீது சந்தேகம் வலுவடைந்ததையடுத்து தீவிரமாக நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் மணீஷ் குமார் குப்தா என்பது தெரியவந்தது. நீண்ட காலமாக ஐஏஎஸ் அதிகாரி என்ற போர்வையில் வலம் வந்து பலரிடம் பெருமளவில் மோசடியில் ஈடுபட்டதும் காவல்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு வீட்டைச் சுற்றி ஏராளமான கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
மணீஷ் குப்தா இது போன்ற மோசமான செயல்கள் மூலம் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துகளைச் சேர்த்திருக்கலாம் என்று போலீசார் தீவிரமாகக் கருதுகின்றனர். இருப்பினும் இந்தத் தொகை மற்றும் சொத்துகளின் முழுமையான மதிப்பு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக இறுதிச் செய்யப்படவில்லை. விசாரணை முழுமையாக முடிந்த பின்னர்தான் உண்மையான சொத்து மதிப்பு மற்றும் முறைகேடு விவரங்கள் முழுமையாகத் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.