போலி சாமியார் மிரட்டல்...  கல்லூரி மாணவி விபரீத முடிவு!

 

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ரேணுகா என்பவர் தனது தனிப்பட்ட குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு காண இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த ஒரு சாமியாரை தொடர்பு கொண்டுள்ளார். அந்த மர்ம நபர் தன்னை கடவுளின் அவதாரம் போல காட்டிக்கொண்டு அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி மயக்கியுள்ளார். மனக்குறைகள் நீங்கும் என நம்பிய அந்த மாணவியிடம் இருந்து அந்த போலி சாமியார் கொஞ்சம் கொஞ்சமாக பணம் பறிக்கத் தொடங்கியுள்ளார்.

ஆன்லைன் வழியாக இதுவரை மொத்தம் 74,400 ரூபாயை அந்த மாணவி சாமியாரிடம் தாரை வார்த்துள்ளார். ஆனால் அதோடு விடாத அந்த போலி ஆசாமி மீண்டும் மீண்டும் பணம் கேட்டு அந்த பெண்ணை நச்சரித்துள்ளார். ஒரு கட்டத்தில் பணம் கொடுக்க மறுத்தபோது பணம் தராவிட்டால் உனக்கும் உன் பெற்றோருக்கும் பெரிய ஆபத்து நேரிடும் என அந்த நபர் கொடூரமாக மிரட்டியதால் மாணவி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

தொடர் மிரட்டலால் அச்சமடைந்த மாணவி ரேணுகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக அந்த மர்ம நபர் மீது வழக்கு தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர். பொதுமக்கள் இது போன்ற ஆன்லைன் மோசடி பேர்வழிகளிடம் சிக்கி தங்கள் பணத்தையும் உயிரையும் இழக்க வேண்டாம் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.