சிகிச்சை பெற வந்த புதுப்பெண் பலாத்காரம் - போலி சித்த மருத்துவர் கைது!

 

கேரளாவில் தாம்பத்தியப் பிரச்சினைக்குச் சிகிச்சை பெறச் சென்ற புதுப்பெண் ஒருவரை, போலி சித்த மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, பலாத்காரம் செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள தாமரசேரி பகுதியில் திருமணமான புதுப்பெண் ஒருவர் தனக்கு இருந்த தாம்பத்தியப் பிரச்சினைக்குத் தீர்வு காணச் சிகிச்சை பெற நாடியுள்ளார். அங்குத் தன்னைச் சித்த மருத்துவர் என அறிமுகப்படுத்திக் கொண்ட அன்வர் சதாத் என்பவர், அந்தப் பெண்ணிற்குச் சிகிச்சை அளிப்பதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர் புதுப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், தலைமறைவாக இருந்த அன்வர் சதாத்தை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், கைது செய்யப்பட்ட அன்வர் சதாத் உண்மையான மருத்துவர் அல்ல என்பதும், போலி மருத்துவராக வலம் வந்து பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.