இந்தியாவுக்கு எதிராக போலி வீடியோக்கள்... சீன சமூக வலைதளப் பதிவர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம்!
வங்காளதேசத் தலைநகர் டாக்காவின் ஏழ்மையான பகுதிகளின் காட்சிகளை இந்தியத் தலைநகர் டெல்லி என தவறாகச் சித்தரித்துச் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் சீன இணையப் பிரபலங்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. சீனாவைச் சேர்ந்த சில சமூக வலைதளப் பதிவர்கள், இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவது அம்பலமாகியுள்ளது.
வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள மிகவும் பின்தங்கிய ஏழைப் பகுதிகளின் வீடியோ காட்சிகளைப் படம்பிடித்து, அவற்றை இந்திய தலைநகர் டெல்லியின் காட்சிகள் எனப் பொய்யான தகவல்களுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்தியாவைத் தவறான கண்ணோட்டத்தில் சித்தரிக்கும் இந்த விஷமப் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக, உள்ளூர் நபர்களுக்குப் பணம் வழங்கப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரத்தைத் தீவிரமாகக் கவனத்தில் கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், சீனப் பதிவர்களின் இச்செயலுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
பிற நாட்டின் கலாச்சாரம் மற்றும் வளர்ச்சியைத் திட்டமிட்டுத் தவறான கண்ணோட்டத்தில் சித்தரிக்கும் இத்தகைய மலிவான முயற்சிகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.
சமூக வலைதளங்களில் இந்தியாவுக்கு எதிராகப் பரப்பப்படும் இத்தகைய போலிச் செய்திகள் மற்றும் அவதூறு வீடியோக்கள் குறித்துத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.