பகீர் வீடியோ... மும்பை கணபதி பந்தலில் மின்சாரம் தாக்கி சிறுமி உட்பட 2 பேர் பலி; 4 பக்தர்கள் படுகாயம்!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள புகழ்பெற்ற கணபதி பந்தலில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கியதில் சிறுமி உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பக்தர்கள் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மும்பை லால்பாக் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற காலாசவுக்கி கணபதி பந்தலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விடக் கூட்டம் அதிகமாக அலைமோதியது. அப்போது அதிகாலை 2:20 மணியளவில், பந்தலின் நுழைவாயில் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த குடிநீர் மற்றும் குளிர்பானக் கடைக்கு அருகில் சென்ற மின் ஒயரில் திடீரென மின் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் மின்சாரம் பாய்ந்தது.
மின்சாரம் பாய்ந்ததைக் கண்ட பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இருப்பினும், மின்தாக்குதலில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். உடனடியாகத் தீயணைப்புப் படையினர், காவல்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து மின் இணைப்பைத் துண்டித்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்குச் சிகிச்சை பலனின்றி ராகினி யாதவ் (8) என்ற சிறுமியும், சுஜாதா (33) என்ற பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இத்துயரச் சம்பவத்தில் காயமடைந்த கிரண் அக்பர் நாயக் (19), தன்வி நரேஷ் ஹண்டே (19), சாஹில் சந்தீப் தாரே (19) ஆகிய மூவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ரூஹி சிங் (12) என்ற சிறுமி பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்துக் காலாசவுக்கி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.