ஒரே வாரத்தில் ரூ.1.10 சரிவு... முட்டை கொள்முதல் விலை மேலும் 30 காசுகள் சரிவு!
நாமக்கல் மண்டலத்தில் கோழி முட்டையின் கொள்முதல் விலை மேலும் 30 காசுகள் குறைக்கப்பட்டு, ரூ.5.40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.70-ஆக இருந்து வந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் அதன் விலையை 30 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவின் மூலம், தற்போது ஒரு முட்டையின் கொள்முதல் விலை 540 காசுகளாக (ரூ.5.40) குறைந்துள்ளது.
ஆடி மாதம் பிறந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இறைச்சி மற்றும் முட்டை நுகர்வு கணிசமாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே முட்டையின் விற்பனை சரிந்து விலை குறைக்கப்பட்டு வருவதாகப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மண்டலத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முட்டையின் கொள்முதல் விலை ஒட்டுமொத்தமாக ரூ.1.10 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.