பிரபல நடிகர் பரத் காந்த் சாலை விபத்தில் பலி... திரையுலகில் அதிர்ச்சி!

 

 

தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகரும், டிஜிட்டல் படைப்பாளியுமான கே. பரத் காந்த் (31) சாலை விபத்தில் அகால மரணமடைந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் காரில் பயணம் செய்த அவரது நெருங்கிய நண்பரும், யூடியூப் கலைஞருமான ஜி. சாய் திரிலோக் என்பவரும் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று அதிகாலை ஐதராபாத் வெளிவட்டச் சாலையில் ஆதிபட்லா என்ற இடத்திற்கு அருகே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஷம்ஷாபாத் பகுதியில் இருந்து பரத் காந்த் காரை ஓட்டிச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அவரது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில், உள்ளே இருந்த இருவரும் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த ஆதிபட்லா போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிவேகமாக காரை இயக்கியது மற்றும் ஓட்டுநரின் உடல் சோர்வு காரணமாக இந்தக் கார் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இருவரும் இளவயதிலேயே சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர்கள் என்பதால், அவர்களது மறைவுக்குத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்திற்கான முழுமையான காரணங்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.